கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற மாநில அரசுகள் தொடர்ந்து கோரி வந்தன. இதனை ஏற்ற மத்திய அரசு, ஜூன் 21ஆம் தேதிமுதல், மாநிலங்களுக்குத் தாங்களே தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்தது. அதன்படி மத்திய அரசே நேரடியாக தடுப்பூசி வழங்க தொடங்கிய நாளான ஜூன் 21ஆம் தேதி, 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆனால், அதற்கடுத்த நாளான நேற்றோ (ஜூன் 22) 54.22 லட்சம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டன. 21ஆம் தேதி, அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களாக இருக்கும் நிலையில், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக தடுப்பூசி பதுக்கிவைக்கப்பட்டு திங்கட்கிழமை செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஞாயிற்றுக்கிழமை பதுக்குவது, திங்களன்று தடுப்பூசி செலுத்துவது, செவ்வாய்க்கிழமை மீண்டும் நோண்ட தொடங்குவது. இதுதான் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட உலக சாதனையின் பின்னால் இருக்கும் இரகசியம்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். யாருக்குத் தெரியும், மோடி அரசுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படலாம். 'மோடி ஹை, மும்கின் ஹை' (மோடி இருந்தால் சாத்தியமாகும்) என்பதை இனி ‘மோடி ஹை, மிராக்கிள் ஹை' (மோடி இருந்தால் அதிசயம் நடக்கும்) என்று படிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
'மோடி ஹை, மும்கின் ஹை' என்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாசகம் ஆகும். தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இந்த வாசகத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.