இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித்ஷா பேசியதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெலுங்கானா சென்ற போது, அங்கு நடந்த கட்சி கூட்டத்தில், “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி ஒவைசியிடம் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை மோடியே வைத்து இருப்பார்.
முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய இருக்கையை தக்கவைப்பதில் கவனம் செலுத்தட்டும். ஒருபோதும் பிரதமர் மோடியை தெலுங்கானா மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடையாமல் சந்திரசேகர் ராவின் அரசு தடுத்து வருகிறது. ஆனால், கண்டிப்பாக பாஜக தெலுங்கானாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என்றார்.
இது அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. அறிக்கையின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். சீனாவுடன் எல்லை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல் அமித்ஷா இஸ்லாமியர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.