அண்மையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோ போலியானது என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக ஒரு தவறான போலியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களுமே போலியானது. இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவத்தில் ஒன்று பீகாரை சேர்ந்த இரு குழுக்களில் ஏற்பட்ட மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் மோதிக் கொண்டது. ஆனால் இது அப்படியே மாற்றப்பட்டு தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி செய்தி பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது” என்றார்.
முன்னதாக 'தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித் தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி பீகாரில் வசிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்' என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து தமிழக காவல்துறையும் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் இந்தி பேசுவோரும் வட இந்தியரும் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பிற ஊடகங்களிலும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதிலிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் பதிவிடப்படுகின்றன. இம்மாதிரியான வதந்திகளை நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்து பீகாரில் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏக்கள் குழு தமிழகத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவையின் மையப் பகுதிக்கு சென்று மேசைகள் மீது நாற்காலியை தூக்கி வீசி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு விளக்கமளித்து பேசிய பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படும் செய்திகளை தமிழக டி.ஜி.பி. நிராகரித்துள்ளார். உறுதிப்படுத்தப்படாத விவகாரங்களை பாஜக விவாதிக்கிறது” என்றும் கோரியுள்ளார்.