
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று (26-06-24) நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா, சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (27-06-24) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வந்து உரையாற்றினார். அப்போது அவர், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு சவாலையும், ஒவ்வொரு சோதனையையும் தாங்கி நிற்கிறது. அரசியலமைப்புச் சட்டம் உருவாகும் போது கூட, இந்தியா தோல்வியடைய வேண்டும் என்று விரும்பும் சக்திகள் உலகில் இருந்தன. அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் பலமுறை தாக்கப்பட்டது. இன்று ஜூன் 27. ஜூன் 25, 1975 அன்று அமல்படுத்தப்பட்ட அவசரநிலை, அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயமாகும். அப்போது, ஒட்டுமொத்த நாடும் கோபமடைந்தது. ஆனால், குடியரசின் மரபுகள் இந்தியாவின் மையத்தில் இருப்பதால், அத்தகைய அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளை எதிர்த்து நாடு வெற்றி பெற்றது” என்று பேசினார்.
அதே போல், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், “எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்தது? அவர்களுக்கு மரியாதையையும் ஓய்வூதியத்தை சமாஜ்வாதி வழங்கியது. இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுகிறது என்று கூறுகின்றனர். ஆனால், நமது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தால், ஏன் பல இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? ஏன் அக்னிபாத் போன்ற திட்டம்? விலைவாசி உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கடுமையாகப் பேசினார்.