தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவர். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே தான் இருப்பேன். சிலர் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள்; அதற்கு நானே கவலைப்படவில்லை உங்களுக்கு என்ன கவலை? நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் அல்ல; வியூகம் அமைத்து கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கூடுதலாகத் தொகுதிகள் பெற்றிருப்போம்” என்றார். இதையடுத்து நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
இது பா.ஜ.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பாஜகவின் முன்னாள் தலைமைக்கும், இன்னாள் தலைமைக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பிய தற்போதைய பாஜக தலைவர் இனிமேல் பேட்டி எல்லாம் அலுவலகத்தில் தான் கொடுப்போம். விமான நிலையத்தில் எல்லாம் பேட்டி கிடையாது. எல்லாவற்றையும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உங்களிடம் கூறுவார்கள் என்று விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இதனிடையே, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று (12-06-24) ஆந்திராவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ தற்போது படுவைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழிசை செளந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பதாகக் கூறப்படும் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்தவர். அவரை இப்படி நடத்துவதை நாங்கள் மோசமாக உணர்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையோ இது போல் நடத்துவாரா?. தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவதா?. இது மிகவும் விரும்பத்தகாதது” என்று தெரிவித்துள்ளார்.