அயோத்தி நில வழக்கில் இராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், இராமர் கோயில் கட்ட அறக்கட்டளை ஏற்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையே கோயில் நிதி விவகாரங்களைக் கவனித்துவருகிறது. அயோத்தி இராமர் கோயில் கட்ட மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தையும் இந்த அறக்கட்டளையே நிர்வகித்துவருகிறது. இந்தநிலையயில், சமாஜ்வாடி கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளன.
உத்தரப்பிரதேச அமைச்சர் பவன் பாண்டே அயோத்தியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இரண்டு ரியல் எஸ்டேட் வியாபாரிகள், ஒரு நபரிடமிருந்து 2 கோடிக்கு நிலம் வாங்கியதாகவும், சில நிமிடங்களில் அதே நிலத்தை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 18 கோடிக்கு வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டியதோடு, அதுதொடர்பாக சில ஆவணங்களையும் காட்டினார்.
தொடர்ந்து அவர், "இந்த சொத்தின் விலை சில நிமிடங்களில் 2 கோடியிலிருந்து 18 கோடி என சொல்லுமளவிற்கு, அந்த நிலம் தங்கத்தை அளித்ததா? இதன்பொருள் 16.5 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ராமர் கோயில் அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான மக்கள் நன்கொடைகளை வழங்கினர். தங்களது சேமிப்பைச் சுரண்டி எடுத்து நன்கொடை வழங்கினர். அவர்களின் பணத்தில் நீங்கள் இதைச் செய்தால், இது நாட்டின் 120 கோடி மக்களை அவமதிப்பதாகும்" என கூறினார்.
ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங்கும் இதே குற்றசாட்டுகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைச் செயலாளர் சம்பத் ராயிடம் கருத்து கேட்கப்பட்டது. முதலில் கருத்து சொல்ல மறுத்த அவர், பிறகு ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் நிலத்தை முதலில் வாங்கியவர்கள், சில வருடங்களுக்கு முன்பே நிலத்தின் உரிமையாளரோடு அப்போதைய விலையில் நிலத்தை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், மார்ச் மாதம் தற்போதைய விலையில் கோயில் அறக்கட்டளைக்கு நிலத்தை விற்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.