
கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், பால் மற்றும் டீசல் விலையை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. இந்த விவகாரம் மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பால் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்தும், காங்கிரஸ் அரசை கண்டித்தும் பா.ஜ.க சார்பில் நேற்று (02-04-25) பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில், முன்னாள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க மாநிலத் தலைவர் விஜேயந்திரா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அசோகா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை தொடங்கிய இந்த தர்ணா போராட்டம், இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 2வது நாளாக தொடங்கிய இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.கவினர், முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார், எடியூரப்பா உள்பட பா.ஜ.கவினரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.