மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு ஃக்யூட் உடன் ஜெஈஈ மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை இணைத்து ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என மத்திய கல்வி அமைச்சர் பிரதான் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வும் பொறியியல் படிப்புகளில் சேர ஜெஈஈ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் மத்திய பல்கலைக் கழகங்களில் சேர ஃக்யூட் என்ற நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஜெஈஈ நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ஃக்யூட் நுழைவுத்தேர்வுடன் இணைத்து ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.
பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார், நீட், ஜெஈஈ போன்ற நுழைவுத் தேர்வுகளை இணைத்து ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற திட்டத்தின் கீழ் ஃக்யூட் நுழைவுத்தேர்வுடன் இணைத்து ஒரே பெயரில் நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கொட்ட நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் பிரதான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நுழைவுத்தேர்வுகளை இணைத்து ஒரே தேர்வாக நடத்தும் திட்டம் தற்போது இல்லை என கூறியுள்ளார். எனவே மாணவர்கள் பதட்டம் ஏதும் இன்றி நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் ஆகலாம் எனவும் கூறியுள்ளார்.