புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ நேற்று முன்தினம் (16.02.2021) ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பிலும் 14 என்ற சமமான எண்ணிக்கையில் தொடர்வதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் நாராயணசாமிக்கு ஏற்படுமா? யாருக்கு ஆட்சி? என புதுச்சேரி அரசியல் படுவேகத்தில் பரபரப்புகளுடன் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (17.02.2021) புதுச்சேரி வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட விழாவில், முதல்வர் நாராயணசாமியின் மொழிபெயர்ப்பு விமர்சனத்தைப் பெற்றுள்ளது. நேற்று புதுவை வந்த ராகுல் காந்தி, சோலையூர் என்ற பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுவை முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்திக்கு மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் 'புயல் நேரத்தில் எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை. ஏன் அவர் கூட (முதல்வர் நாராயணசாமி) எங்களை வந்து பார்க்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை' என்று பகிரங்கமாகக் கூறினார். இதனை மொழிபெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறிய முதல்வர் நாராயணசாமி, ''அட் த டைம்.. டூரிங் நிவர் சைக்லோன் டைம்... ஐ கேம் அண்ட் விசிட்டேட் த ஏரியா... அண்ட் கேவ் ரிலீஃப் டு தெம்.. தட் இஸ் ஷி சே'' (புயல் நேரத்தில் நான் அந்த இடங்களைப் பார்வையிட்டேன். நிவாரணங்கள் வழங்கினேன் என அவர் சொல்கிறார்) என மொழிபெயர்த்தார்.
ராகுல் காந்திக்கு தமிழ் தெரியாது என நாராயணசாமி இவ்வாறு மாற்றிப் பேசியுள்ளார் என அவரது மொழிபெயர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே குற்றச்சாட்டு வைத்த அந்த மூதாட்டி, தான் வாய்தவறி சொல்லிவிட்டதாக விளக்கமளிக்கும் வீடியோ ஒன்று புதுவை முதல்வர் அலுவகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.