கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப்பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போதுவரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளைச் செலுத்தி போராடிவருகிறது. தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவில் வட மாநிலங்களில் கரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்துவருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. டெல்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களைப் பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 45இல் இருந்து 49 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாகத் தெலங்கானாவில் குழந்தைக்கு 'ஒமிக்ரான்' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 7 வயது குழந்தை உட்பட 3 பேருக்கு 'ஒமிக்ரான்' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் சென்ற பயணியின் 7 வயது குழந்தைக்கு 'ஒமிக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தெலங்கானாவிற்கு கென்யா மற்றும் சோமாலியாவிலிருந்து வந்த தலா ஒருவருக்கு என மொத்தம் 3 பேருக்கு 'ஒமிக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளது.