ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு இரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 275 பேர் இறந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் தற்காலிக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய தங்களது உறவுகளை மீட்கவும், விபத்தில் இறந்த தங்களின் உறவினர்களின் உடலை சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்லவும் பலரும் பல கிலோ மீட்டர் பயணம் செய்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹௌரா பகுதியைச் சேர்ந்தவர் ஹெலாரம் என்பவரின் மகன் பிஸ்வஜித். இவர் ஹெளரா பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் விபத்தில் சிக்கிய கோரமண்டல் விரைவு இரயிலில் பயணித்துள்ளார். அந்த இரயில் விபத்தில், சிக்கியது எனும் தகவல் அறிந்த பிஸ்வஜித்தின் தந்தை ஹெலாரம், உடனடியாக தனது மகனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பிஸ்வஜித், தனது தந்தையிடம் சிறிது நேரம் பேசியுள்ளார். ஆனால், அப்போதே அவர் மிகவும் சோர்வாகப் பேசியுள்ளார். இதன் மூலம், பிஸ்வஜித் விபத்தில் சிக்கியிருந்தாலும், உயிருடன் இருக்கிறார் என அவரது தந்தை ஹெலாரம் நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து ஹெலாரம் மீண்டும் பிஸ்வஜித்துக்கு தொடர்பு கொண்டபோது அவர் தனது தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பதற்றம் அடைந்த ஹெலாரம், உடனடியாக மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம், 230 கி.மீ பயணித்து விபத்து நடந்த பாலசோருக்கு சென்றுள்ளார். அங்கு விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் தனது மகனைத் தேடியுள்ளார். ஆனால், அவரால் பிஸ்வஜித்தை கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து மிகுந்த அச்சத்துடன், விபத்தில் சிக்கி இறந்தவர்களை வைத்திருந்த தற்காலிக பிணவறைக்குச் சென்று அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதங்களுக்கு இடையே மிகுந்த கவலையுடன் தனது மகனைத் தேடியுள்ளார். அங்கு ஹெலாரம், தனது மகன் பிஸ்வஜித்தை கண்டுள்ளார். அப்போது பிஸ்வஜித் உயிருடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹெலாரம், உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது மகன் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட பிஸ்வஜித், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹெலாரம், அவரது மகனை தன் சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது, பிஸ்வஜித் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மகனை 230 கி.மீ. பயணித்து உயிருடன் மீட்ட தந்தையின் செயலைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், உயிருடன் இருந்த ஒருவர் பிணவறையில் வைக்கப்பட்டது அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுவதாகவும், அரசுக்கு மக்கள் உயிர்களின் மீது இருக்கும் அக்கறையின்மையைக் காட்டுவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.