உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் கீழ், இந்த விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 14 பேருக்கு எதிராக 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் ஆஷிஸ் மிஸ்ரா மீது பிடி இறுகியுள்ளது.
இந்தநிலையில் சிறப்பு விசாரணை குழு வட்டாரங்கள், "தேவையான ஆதாரங்கள் கிடைத்ததும் இன்னும் சிலர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விவசாயிகள் அளித்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடைபெறும்" என தெரிவித்துள்ளன. விவசாயிகள் அளித்த புகாரில் அஜய் மிஸ்ராவின் பெயரும் இருப்பதால், அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்ப தொடங்கியுள்ளனர்.