கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் கடந்த ஜூன் 11ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சக்தி திட்டம் என்று பெயரிடப்பட்டு அதற்கான அடையாள அட்டையை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தங்களது 28 கோரிக்கைகளை அரசுப் போக்குவரத்துத் துறை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து நேற்று (11-09-2023) மாநிலம் முழுவதும் கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது. இது குறித்து, தனியார் போக்குவரத்து ஊழியர்கள் இந்த சக்தி திட்டத்தால் தாங்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று கூறினர். பின்னர், ஜூலை 24 மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் கலந்து பேசினர். அப்போது, செயலி மூலம் இயங்கும் வாகன சேவைகளையும் நிறுத்த வேண்டும் என 30 கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு அமைச்சர், தனியார் போக்குவரத்து சங்கங்களின் 30 கோரிக்கைகளில் 28 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அரசுத் தரப்பிடம் பதில் தரப்படாததால் நேற்று கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது.
இந்நிலையில், நேற்று கர்நாடகாவுக்கு வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே தனது வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூரில் டாக்ஸிகள் இயங்காததால், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய பயணிகளுக்கு வீடு திரும்ப வாகனம் கிடைக்காத சூழல் உருவானது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அணில் கும்ப்ளே, விமான நிலையத்தில் இருந்து பனசங்கரி வரை மாநகர போக்குவரத்து கழக பஸ்சில் பயணித்துள்ளார். இது குறித்த அணில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்திலிருந்து இன்று பிஎம்டிசி பஸ்ஸில் வீடு திரும்பினேன்” என பேருந்தில் பயணித்த புகைப்படத்தை பகிர்ந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.