தங்களது போராட்டத்தில் உள்ள சில ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதால், அவர்களைப் போராட்டத்தில் அனுமதிக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 'ஷாஹின்பாக் தாதி' என அழைக்கப்படும் மூதாட்டி பில்கிஸ்பானு மூன்று தினங்களுக்கு முன் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கப் போராட்டக் களத்திற்கு வந்தார்.
ஆனால், டெல்லியின் எல்லைக்கு முன்பாகவே அவரை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். எனவே, இதன் மறுநாள் ஷாஹின்பாக் போராட்டத்தின், வேறுசில முக்கியப் பெண்கள் டெல்லி-ஹரியானா எல்லையான சிங்குவை அடைந்தனர். அப்போது அவர்களில் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களைத் திரும்பச் செல்லும்படி கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள், தங்களது போராட்டத்தில் கலந்துகொள்ள விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.