ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து 4 நாட்களுக்கு மேலாகும் நிலையில் 80க்கும் மேற்பட்ட உடல்களை அடையாளம் காண முடியாத சூழல் உள்ளது. உடல்களை மாற்றி மாற்றி ஒப்படைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதால் குழப்பங்கள் நீடித்த வண்ணம் உள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பல்வேறு கட்டங்களாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிக்னல் மாறியதால் ரயில் தடம் மாறிச் சென்றதாக முதலில் குறிப்பிடப்பட்டது. ஆனால் சிக்னல் பகுப்பாய்வு செய்யும் கருவியில் சரியான சிக்னல் இருந்தும் ரயில் தடம் மாறியது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் முரண்பாடுகள் வருவது இயல்பு எனக் கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முடிவே இறுதியானது எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் பாலசோர் மருத்துவமனையில் இருந்து புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு உடல்களைப் பதப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உடல்களை வைக்க இடமில்லாததால் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் வரவழைக்கப்பட்டது. இருந்தாலும் விபத்து நடந்து 4 நாட்கள் ஆகிய நிலையில் 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளது. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் மாறி மாறி ஒப்படைப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.