காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த நிலையில், காவலர் குறித்து அவரது மனைவி கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று கொண்டிருந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை உதவி சார்பு ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அமைச்சர் நபாதாஸின் நெஞ்சுப்பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தன.
இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர் கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிகழ்வு அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நபா தாஸிற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில், அமைச்சரை சுட்ட காவலர் கோபால் தாஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து காவலரின் மனைவி ஜெயந்தி கூறியது, “என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இப்படி ஒன்று நடந்தது என்பதை செய்தித்தாள் மூலமாகத்தான் அறிந்தேன். எனக்கு எப்படித் தெரியும். நான் வீட்டில் இருக்கிறேன். அவர் எங்களிடம் வீடியோ காலில் பேசிய பின் நான் அவருடன் பேசவில்லை. அவர் மனநலப் பிரச்சனையால் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். மருந்துகளை உட்கொண்ட பிறகு அவர் சாதாரணமாக நடந்து கொள்வார். அவர் கடைசியாக 5 மாதங்களுக்கு முன்புதான் வீட்டில் இருந்தார்” எனக் கூறியுள்ளார்.