இந்தியாவில் தினசரி 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையில், பல்வேறு மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், திரைப்பிரபலங்களும் சிக்கி வருகின்றனர்.
இந்தநிலையில், மேகாலயா மாநிலத்தின் முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு நேற்று கரோனா உறுதியானது. தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள கான்ராட் சங்மா, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைக் கண்காணிக்குமாறும், தேவை என்றால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் கான்ராட் சங்மா, மேகாலயா-அசாம் எல்லைப்பிரச்சனை தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவோடு சேர்ந்து கடந்த வியாழனன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தற்போது முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை எனவும், அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.