![dfgdfgfg](http://image.nakkheeran.in/cdn/farfuture/aylQVsg3t-c9xTAN8AiIwi4Mnxmamv3vt532j1K958U/1551177560/sites/default/files/inline-images/salute-std.jpg)
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஆளும் பாஜக தலைவர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சி தலைவர்களும் இந்திய வான்படைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்திய வான்படைக்கு சல்யூட்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "பாகிஸ்தானில் பயங்கரவாத இலக்குகளை அழித்தது மூலம் நம்மை பெருமைப்படுத்திய இந்திய விமானப்படை விமானிகளின் தைரியத்தை நான் வணங்குகிறேன்" என கூறியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில், "இது ஒரு தரமான சம்பவம்" என கூறினார்.