புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள மைதானத்தில் இன்று (30/03/2021) மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதேபோல், முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி, அ.தி.மு.க.வின் அன்பழகன், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி, "தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு பிரச்சாரத்திற்காக பிரதமர் இரண்டாவது முறையாக வந்ததற்கு நன்றி. புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வாக்குறுதியைக் கூட நாராயணசாமி நிறைவேற்றவில்லை. ஏற்கனவே இருந்த திட்டங்களையும் நாராயணசாமி முடக்கினார். கடந்த ஐந்து ஆண்டுகள் இருண்ட ஆட்சியை நாராயணசாமி நடத்தியுள்ளார்" எனக் குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து பேசிய ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.