வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் என பல மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
குறிப்பாக இமாச்சலப்பிரதேசம் பீஸ் நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருகில் உள்ள மருத்துவமனையில் வெள்ள நீரானது புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் மீட்கப்பட்டனர். அதேபோல் இமாச்சலப்பிரதேசம் மண்டி பகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமை வாய்ந்த புரானா என்னும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தின் குலு மலைப்பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இமாச்சலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 39 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காணாமல் போன எட்டு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் கடந்த 14 நாட்களில் 750 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் 3000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளப்பெருக்கால் 146 ஆண்டுகள் பழமையான விக்டோரியா மேம்பாலம் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளம் காரணமாக வீடுகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், மின்கம்பங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர் மழையால் தத்தளித்து வருகிறது இமாச்சலம்.