பதஞ்சலி நிறுவனத்தின் கரோனில் மருந்தை விற்பனை செய்ய எந்தவித தடையும் இல்லை என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய, உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துவரும் சூழலில், இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மூலம் இதற்கான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த மருந்தைக் கரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததில் ஐந்து முதல் பதினான்கு நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனாவைக் குணப்படுத்தும் எனக்கூறி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்திய மருந்தை விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது.
இந்நிலையில் ஹரித்துவாரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், "கரோனா தடுப்பில் பதஞ்சலி தகுந்த பணிகளை செய்துள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி சரியான திசையில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்துடன் தொடர்பிலுள்ள மாநிலத் துறையிலிருந்து இந்த மருந்துகளுக்கான உரிமத்தை நாங்கள் வாங்கியுள்ளோம். தற்போது கரோனில், சுவாசரி உள்ளிட்டவற்றுக்குத் தடையில்லை. சுவாசரி கரோனில் தொகுப்பு மருந்துகள் இன்று முதல் நாடு முழுவதும் எவ்வித சட்ட ரீதியிலான இடையூறுகளின்றி கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்துக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.