தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரோனாவை கட்டுப்படுத்த இரு மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 ஆம் தேதி முதல் இன்று காலை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்து. அதேசமயம் தமிழகத்தில் இன்று காலை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக பகுதியில் இருந்து அத்தியாவசியமின்றி யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தபட்டதை அடுத்து புதுச்சேரி-தமிழக எல்லையான பகுதியான கோரிமேட்டில் புதுச்சேரி போலீசார் சோதனைச் சாவடி அமைத்து தமிழக பகுதியிலிருந்து அத்தியாவசிய தேவை இல்லாமல் புதுச்சேரிக்கு வராமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது எல்லைப்பகுதியில் தன்வந்திரி நகர் தலைமை காவலர் முருகன் தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார் மூலம் புதுச்சேரிக்கு வருவோரிடம் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வரவேண்டாம் என்றும், நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணிக்க வேண்டாம் என்றும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தாங்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறி இரு கைகூப்பி வேண்டிக்கொண்டார். அதேசமயம் பல்வேறு எல்லைப்பகுதி சோதனைச்சாவடிகளில் தொடர்ந்து அத்தியாவசிய தேவை இல்லாமல் வரும் கார் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் 100 ரூபாய் அபராதமும் விதித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.