ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் என்.எல்.சி. இந்தியா தலபிரா அனல் மின் திட்டமான 2400 மெகாவாட் முதல் நிலைத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், டிஸ்லேஸ்வர் துது மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணியை துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த அரசு எந்த ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் தொடங்கி வைப்பதையும் உறுதி செய்கிறது. இந்த அனல் மின் நிலைய திட்டம் ஒடிசாவுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதோடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும். நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்தின பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்திய நிறுவனத்தின் முன் முயற்சியான மின் திட்டம் நாட்டின் எரிசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
27 ஆயிரம் கோடிக்கு மேலான முதலீட்டுடன் நிலக்கரி அடிப்படையிலான அல்ட்ரா சூப்பர் கிரிட்டிக்கல் பீட் ஹெட் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் எரிசக்தி பாதுகாப்பை வளர்ப்பதற்கும் நாட்டின் வளர்ச்சி பாதையில் செல்வதற்கும் ஒரு மகத்தான படியை குறிக்கிறது. ஆரம்பகட்டத்தில் 2400 மெகாவாட் திறனை உள்ளடக்கிய இந்த திட்டம் இரண்டாம் கட்டத்தில் ரூ 8000 கோடி முதலீட்டில் கூடுதலாக இன்னொரு மெகா திட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப் பெரிய கிரீன் பீல்ட் அனல் மின் நிலையமாக மாற உள்ளது. என்எல்சி தலபிரா அனல் மின் நிலைய அனுமின் திட்டம் சுரங்கத்தின் அருகிலேயே அனல் மின் நிலையங்களை உருவாக்குகிறது.
அனல் மின் நிலையம் அதன் சமீபத்திய சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புடன் நிலையான மின் உற்பத்தியை உறுதி செய்யும். கூடுதலாக இந்த அணுமின் நிலையம் மூலம் ஒடிசா மாநிலம் மற்றும் பிற பயனாளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்கும். மேலும் என்.எல்.சி. இந்திய தலபிரா அனல் மின் திட்டம் வெறும் உட்கட்டமைப்பு முயற்சி மட்டுமல்லாமல் இது சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஒரு உத்தியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. பிராந்தியத்தை உள்ளடக்கிய வளர்ச்சியை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு 1787 கோடி யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளுடன் இத்திட்டம் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கும் தயாராக உள்ளது” என அவர் பேசினார்.