பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இதையடுத்து பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்தது.
இதனையடுத்து, பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், சாதிவாரி இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அடுத்து சபையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கோபமடைந்த முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ஒருவரை விமர்சித்துப் பேசினார்.
அதில் அவர், “என்னுடைய உதாரணத்தில்தான் நீங்கள் அனைவரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டீர்கள். அதன் பிறகு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டன. நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது. நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பீகாரில் பெண்களுக்கு உரிய உரிமை கிடைக்க ஆரம்பித்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? பாட்னா உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு சட்டங்களை ரத்து செய்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இந்த சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் வைக்க மத்திய அரசுக்கு முறையான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது” என்று கோபமாக பேசினார். நிதிஷ்குமார் பேசியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.