
நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று கண்டறியப்படும் பல பொது இடங்களுக்கு சீல் வைத்து, அவ்விடங்களைச் சுத்தப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் உள்ள நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மட்டத்திலான பதவியில் இருக்கும் அவர் இத்தனை நாட்களாகத் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளதால், அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுச் சுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.