இந்தியாவில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் கரோனா பரவல் குறித்து கணித்து, அதுதொடர்பாக ஆலோசனைகளை அளிக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினரான ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணிந்திர அகர்வால், இந்தியாவில் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலை உச்சத்தை தொடும் என இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் தற்போது, மஹாராஷ்ட்ரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா அலை இந்த வாரத்தில் உச்சத்தை தொடலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இந்த வாரத்தில் கரோனா உச்சத்தை தொடலாம் என அவர் கூறியுள்ளார்.
அதேபோல் மணிந்திர அகர்வால், தமிழ்நாட்டில் வரும் 25 ஆம் தேதியும், கர்நாடகாவில் வரும் 23 ஆம் தேதியும், ஆந்திராவில் 30 ஆம் தேதியும் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலை உச்சத்தை தொடலாம் எனவும் கூறியுள்ளார்.