இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் பைஜூஸ். கேரளாவைச் சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன்(44) என்பவரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலியில் இணையதளம் வழியாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறலாம். கொரோனா காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இணையதள வழியாக கல்வி கற்பதற்கு இந்த பைஜூஸ் பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலம், பைஜூஸ் பெரும் வருவாய் ஈட்டியது. மேலும், இதன் காரணமாக போர்ப்ஸ் பணக்காரப் பட்டியலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் இடம்பிடித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி கற்கப் பலரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பைஜூஸுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கடன் சுமை, ஊழியர்களின் பணி நீக்கம், வருவாய் இழப்பு, அடுத்தடுத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எனக் கடும் பின்னடைவை பைஜூஸ் சந்தித்தது.
இதனால், பைஜூஸில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து, தங்கள் பணத்தைத் திரும்ப பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்த நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலவாணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரவீந்திரன் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அந்நிய செலவாணி மேம்பாட்டு சட்டத்தின்படி, சுமார் ரூ.9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது குற்றம்சாட்டியது.
அடுத்தடுத்து சிக்கல்களைச் சந்தித்து வருவதைத் தொடர்ந்து, ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க, அவருக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கிடையே, பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை உயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பைஜூஸ் பங்குதாரர்கள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (23-02-24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில், நிறுவனத்தில் ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த முறைகேடுகள், பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதே வேளையில், EGM கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களையும்ம் அடுத்த கூட்டம் வரை செயல்படுத்தக் கூடாது என்று பைஜூஸ் நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், EGM கூட்டத்தை நடத்தலாம், ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மார்ச் 13ஆம் தேதி வரை அமலுக்கு வராது எனத் தெரிவித்தது.
இதற்கிடையே, ஓராண்டுக்கு முன்பு பைஜூஸ் நிறுவனர் ரவீந்தரனின் சொத்து மதிப்பு ரூ.14,545 கோடியாக இருந்த நிலையில், தற்போது பூஜ்ஜியமாக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டது.
பைஜூஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் வேளையில், அர்ஜுன் மோகன் தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற 6 மாதங்களில், அர்ஜுன் மோகன் பதவி விலகியுள்ளார். அர்ஜுன் மோகன் பதவி விலகியதை அடுத்து பைஜூஸ் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை ரவீந்தரன் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைஜூஸ் நிறுவனப் பொறுப்பில் இல்லாதிருந்தாலும் ஆலோசகராக அர்ஜுன் மோகன் தொடருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஏற்கெனவே மோசமாக இருக்கும் வேளையில், சி.இ.ஓ அர்ஜுன் மோகன் வெளியேற்றம் கூடுதல் பிரச்சனையாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.