இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி , பேட்டரியில் இயங்கக்கூடிய புதிய Wagon R எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
![maruti](http://image.nakkheeran.in/cdn/farfuture/nfZIRqkfrAI7x1mtTk8rjaylRgtGdiw3z-Lbyc3gixI/1550854044/sites/default/files/inline-images/maruti-suzuki-std.jpg)
Wagon R எலெக்ட்ரிக் வாகனத்தை 7 லட்சம் ரூபாய்க்குள் பட்ஜெட் பேக்கேஜாக அறிமுகம் செய்ய மாருதி சுசூகி நிறுவனம் முயற்சித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கப்படும் மானியம் இந்த சலுகையில் அடங்கும் எனக் கூறப்படுகிறது.
அதன் மூலம் தோராயமாக சுமார் 1.3 லட்சம் வரையில் மாருதியின் எலெக்ட்ரிக் Wagon R காருக்கு மானியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கி.மீ தூரம் வரையில் பயணிக்கும் திறன் கொண்டதாக Wagon R எலெக்ட்ரிக் காரை தயாரித்துவருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் Wagon R கார், டெஸ்டிங் நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இந்திய சாலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு இவ்வாகனம் சீரமைப்பு பணி நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாக உள்ள எலெக்ட்ரிக் Wagon R மாடல் முன்னதாகவே ஜப்பானில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20-ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்து 200 கி.மீ வரை செல்லக்கூடிய வகையில் தனது நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரித்துவருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.