மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய கல்விக்கொள்கை முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். எனினும், ஒருசிலர் புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அதேபோல், மாநில மொழிகளில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், கல்வியாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்துவருகிறது.
அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக 45 மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (03/09/2021) ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் ஆலோசனையில் பங்கேற்கிறார்.