ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காட்சியளிக்கும். இந்நிலையில் நேற்று மாலை வெளியூரிலிருந்து சத்தியமங்கலம் பஸ் நிலையத்திற்கு அரசு பேருந்து ஒன்று வந்தது. இந்த பஸ்சில் ராசப்ப கவுண்டன் புதூரிலிருந்து பன்னீர்செல்வம் என்பவர் ஏறி சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் பன்னீர் செல்வம் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை திடீரென திருடி கொண்டு ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் திருடன் திருடன் என கத்தினார். இதை அடுத்து சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு விசாரணைக்காக சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த நபர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(28) என்பதும் ஒரு கும்பலாக சேர்ந்து தனியாக வரும் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் தெரிய வந்தது.இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுரேஷ் தொடர்புடைய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.