அக்டோபர் 1-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு இரண்டிலும் புதிய விதிமுறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மோட்டார் வாகன விதிமுறை 1989-ல் கொண்டுவரப்பட்ட புதிய வாகன விதிமுறைகளின் அடிப்படையில் வாகனம் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் மின்னணு வடிவத்தில் மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு இரண்டும் ஒரே மாதிரியாக இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டுமே பிளாஸ்டிக் அட்டையில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைகளில் QR code கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஓட்டுனர் அல்லது வாகன உரிமையாளர் குறித்த முழுத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இதில் 10 ஆண்டுகள் வரையிலான ஓட்டுநர் அல்லது வாகன உரிமையாளரின் அபராதங்கள் உள்ளிட்ட முழு வரலாறும் தெரியவரும்.
இதன் மூலம் வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் ஒட்டுமொத்த விவரங்களையும் ஒரே அட்டையில் அறியக்கூடிய வசதி ஏற்படும். அதேசமயம் அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு தற்போது நடைமுறையில் இருக்கும் ஓட்டுநர் உரிமமும், வாகன பதிவு சான்றிதழும் செல்லுமா அல்லது செல்லாதா என்பதை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.