இந்தியாவில் பல்வேறு மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ் வகைகள் பரவிவருகின்றன. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது அலையில் டெல்டா வகை கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பிரேசில், இங்கிலாந்து நாடுகளிலிருந்து வந்த சர்வதேச பயணிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் புதிய வகை மரபணு மாற்றமடைந்த கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை கரோனா, அறிவியல் ரீதியாக B.1.1.28.2 என அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய வகை கரோனாவைக் கொண்டு சுண்டெலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், இந்தக் கரோனாவால் எடை இழப்பு, நுரையீரலில் புண்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இந்தப் புதிய வகை கரோனா, டெல்டா வகை கரோனாவை போன்றதென்றும், ஆல்ஃபா வகை கரோனாவைவிட இது ஆபத்தானதாக இருக்குமென்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.