மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் முடிவுகளை இன்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.
இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 6ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். அதன்படி, இன்று நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின.
இந்தத் தேர்வில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 180 மதிப்பெண்கள் கொண்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் முறையே 171 மற்றும் 160 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 360க்கு 360 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண் - 691/720. 99.9 சதவீதம் மதிப்பெண்ணுடன் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
தேர்வெழுதிய 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்களில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 598 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களில் ஒரேயொரு தமிழக மாணவி மட்டுமே இடம்பெற்றுள்ளார். கீர்த்தனா எனும் மாணவி இந்தியளவில் 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வெழுதிய 45 ஆயிரத்து 335 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.