தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அனைத்து பிரிவினருக்கும் தலா 100 ரூபாய் உயர்த்தியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள இளநிலை மருத்துவர் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை நடத்தி வருகிறது. நீட் தேர்வு இந்தாண்டு முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 7 ஆம் தேதி நேரடியாக நடைபெறும் இந்த நீட் தேர்விற்கு மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தை அறிமுகம் செய்துள்ள நீட் தேர்வு முகமை இன்று முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுத்துள்ளது. தேர்விற்கான நுழைவுச் சீட்டு போன்ற விபரங்கள் பின்னர் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை கடந்த ஆண்டை விட தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிவு மாணவர்களும் தேர்விற்கு விண்ணப்பிக்க கடந்த ஆண்டை காட்டிலும் 100 ரூபாய் உயர்த்தியுள்ளது தேசிய தேர்வு முகமை. பொது பிரிவினருக்கு 1700, பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கு 1600, எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு 1000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணமாக 9,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கடந்த ஆண்டு கட்டணம் ரூ. 8,500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.