நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அதே வேளையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அதில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முடிவு செய்திருந்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்திருந்தார்.
ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (10.03.2024) வெளியிட்டார். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள், மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மரியாதைக்குரிய சீட்-பகிர்வு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக பலமுறை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும் முறையை காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணி இணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்தரி கூறுகையில், “இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார். இந்தியா கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால், பிரதமர் மோடிக்கு அதிருப்தி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மம்தா பானர்ஜி உள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதன் மூலம், ‘என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். பா.ஜ.க.வுக்கு எதிராக நான் போராட நிற்கவில்லை’ என்று பிரதமர் அலுவலகத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.