தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 23- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மல்டிபிளஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அந்த நாளில் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவெல், ஏசியன், மூவிடைம் உள்ளிட்ட குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 4,000 மல்டிபிளஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய் ஆக விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ரசிகர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பலரும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டால், அது வசூலைப் பாதிக்கும் என கூறினர். வரும் செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண்விஜய்யின் சினம் உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாக உள்ளன.
மேலும், கடந்த வாரம் ரன்வீர் கப்பூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா இந்தி படமும் வட இந்தியாவில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. அதனால் தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 23- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என கருதப்படுகிறது.