வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, பாரத் என்ற பெயருக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக பரவும் தகவல் வதந்தி என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், “பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது. பாரதத்தின் குடியரசுத் தலைவர் என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டது பெரிய விஷயம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்தியா பெயர் மாற்றம் குறித்து பா.ஜ.க அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு நேற்று வருகை தந்தனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இன்று நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் நேற்று டெல்லி வந்தனர். தற்போது, அந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் ஒன்று கூட, பிரதமர் மோடி அனைத்து தலைவர்களையும் வரவேற்றுப் பேசி வருகிறார்.
இதில் ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைக்கு முன்பும், அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடும் வகையில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பு ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி பேசுபொருளாகி வருகிறது.