மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் உள்ள ஜிவ்தானி கோவில் அருகே உள்ள மலையில் இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது மதுபோதையில் அந்த இடத்திற்கு வந்த தீரஜ் சோனி மற்றும் லட்சுமண் ஷிண்டே ஆகிய இருவரும் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் படமாக எடுத்து, பணம் கொடுங்கள், இல்லையென்றால் உங்கள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர் தன்னிடம் பணம் இல்லாததால் தனது நண்பருக்கு போன் செய்து ஜி-பே மூலம் ரூ.500 அனுப்பச் சொல்லியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த தீரஜும், லட்சுமண் ஷிண்டேவும் இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளனர்.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இளைஞர் இளம்பெண்ணை காப்பாற்ற அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தீரஜின் தலையில் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த வாலிபரின் உடைகள் அனைத்தையும் களைத்து கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்பு இருவரும் அந்த இளம்பெண்னை தனியான இடத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்னை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து கை, கால் கட்டுகளை அவிழ்த்த இளைஞர் தனது காதலியை தேடி அலைந்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் தனது காதலியைத் தேடியுள்ளார். அப்போது அந்த இளைஞர் தப்பித்துப் போனவர்களில் ஒருவரின் தலையில் நான் பீர் பாட்டிலால் அடித்தேன் என்று கூற உடனே போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் யாராவது தலையில் காயத்துடன் சிகிச்சைக்கு வந்துள்ளனரா என்று விசாரிக்க தொடங்கினர். அப்போது மலைக்கு அருகே உள்ள மருத்துவமனையில் ஒரு இளைஞர் தலையில் காயத்துடன் சிகிச்சைக்கு வந்துள்ளதாக போலீஸுக்கு தகவல் கொடுக்க, அவரது புகைப்படத்தையும் போலீஸுக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். புகைப்படத்தை பார்த்த இளைஞர், இவரைத்தான் (தீரஜ்) தான் தக்கியதாக உறுதி செய்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீரஜ் சோனியை கைது செய்தனர். மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர். சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததாக போலீசார் கூறினர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.