
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த போது, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி தகுதியுள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் இல்லம் தேடி வரும் என்றார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரை கட்சி நிர்வாகிகள் ஒரு சிலர் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளால் கட்சி பணி ஆற்றுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர். தி.மு.க.வை பொறுத்தவரை கடுமையான உழைப்புடன் கட்சி பணி ஆற்றுபவர்களுக்கும், கட்சி வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கட்சியில் உயர்பதவி நிச்சயம் கிடைக்கும். வருகின்ற 2026ம் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெற நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து சகோதர பாசத்துடன் கட்சிப் பணியாற்றி மாபெரும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

மேலும், கட்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட பணிகள் சம்பந்தமாக மே1 முதல் ஆத்தூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கிராம ஊராட்சிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனு அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியின் போது மாநில விவசாய அணி இணைச் செயலாளரும், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான கள்ளிப்பட்டி மணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபானி, ஆத்தூர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஆ.நாகராஜன், வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியாசரவணன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலர் வடிவேல் முருகன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.