பன்முகத் தன்மையைப் பாதுகாக்கும் கூட்டம்: சரத் யாதவ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், இந்திய நாட்டின் ஆன்மாவான பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சியினரை ஒருங்கிணைத்து இன்று கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத் யாதவ், இந்தக் கூட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. இது நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்குமானது. ரோகித் வெமுலாவின் தற்கொலை, ஜேஎன்யூ பல்கலை மாணவர் நஜீப் அகமது காணாமல் போன விவகாரம், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை மற்றும் இந்தியக் குடிமகன்கள் வாழ வழியற்ற நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, ராஷ்த்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிபிஎம் கட்சியின் சீத்தாராம் எச்சூரி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, நாட்டின் ஒற்றுமையில் கறைபடுத்திய பல தலைவர்கள் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதால், நாங்கள் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்