பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியைக் கடந்த நிலையில் அணை பலமாகவே உள்ளது என அணையை ஆய்வு செய்த மத்திய துணைக்குழு தெரிவித்ததுள்ளது.
மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு பெரியாறு அணையில் மேற்கொண்டது. இக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இருந்தனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் 20 அடி வரை உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 136.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.
இந்நிலையில், அணையில் தற்போதுள்ள நிலவரம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது குறித்து இக்குழு ஆய்வு மேற்கொண்டது. பெரியாறு மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது. மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து மற்றும் தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு நடத்தியது. அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 1, 7, 11 ஆகிய ஷட்டர்களை இயக்கி பார்த்தது. அணைப்பகுதியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் நடந்த ஆலோசனைக்கூட்ட முடிவில், அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப அதன் கசிவுநீர் துல்லியமாக உள்ளதால் அணை பலமாகவே உள்ளது என இக்குழு தெரிவித்தது. இதன் அறிக்கையை மத்திய நீர்ப்பாசன செயற்பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.