18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின,பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக பிரதமர் கூறியது அப்பட்டமான பொய். இது அறியாமையிலிருந்து உருவானது. தோல்வி பயத்தில் இருந்து பிறந்த அவரது விரக்தியின் அறிகுறியாகும். நமது நாட்டின் வரலாற்றில் எந்த தலைவரும் பிரதமரின் அலுவலகத்தை இவ்வளவு கீழ் நிலைக்கு இழிவுபடுத்தியதில்லை.
பொறுப்பான பதவியில் இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அல்லது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியுள்ளது? காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இது போன்ற ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது?
சமூக மற்றும் பொருளாதார ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சோகமானது” எனக் கூறினார்.