ஜியோ வருகைக்கு முன்னர் இந்தியா 2ஜி-யில் பின்தங்கியிருந்தது என ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜியோ 4ஜி இணைய சேவையானது கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ வருகைக்குப் பின் இந்தியாவில் இணையதளப் பயன்பாடு கணிசமான அளவில் அதிகரித்தது. ஜியோ நிறுவனம் அறிவித்த அதிரடி ஆஃபர்கள் மற்றும் விலை குறைவான சேவைகள், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தை நோக்கித் திரும்ப வழிவகுத்தது. 'டிஜிட்டல் உருமாற்றம் உலகம் 2020' என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணைய வளர்ச்சி குறித்துப் பல்வேறு விஷயங்களை பேசினார்.
அதில் அவர், "ஜியோ வருகைக்கு முன்னர் இந்தியா 2ஜி-யில் பின்தங்கியிருந்தது. இதில் மிகப்பெரிய புரட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இந்தியாவில் 2ஜி-யைக் கட்டமைக்க 25 வருடங்கள் ஆனது. ஆனால், ஜியோ 4ஜி சேவையை மூன்று வருடத்தில் உருவாக்கி காட்டினோம். இந்தியாவில் மொபைல் ஃபோன் வசதி என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இல்லை. எங்களது ஜியோ பொறியாளர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உழைத்தனர். விலை குறைவான ஜியோ ஃபோன் இந்தியர்களுக்கு இன்று உலகின் பல கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது" எனப் பேசினார்.