Skip to main content

முதல்வரின் வீட்டின் வெளியே மாசடைந்த தண்ணீரை ஊற்றிய எம்.பி; பரபரப்பான தலைநகர்!

Published on 03/11/2024 | Edited on 03/11/2024
MP pours contaminated water outside CM's house in delhi

தலைநகர் டெல்லியில், காற்று மாசுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காற்று மாசுப்பாட்டால், குழந்தைகளின் சுகாதார நலனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுப்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட, அங்கு பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், டெல்லியின் துவாரகா பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் தரம் குறைந்து காணப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி சுவாதி மாலிவால், துவாரகா பகுதிக்குச் சென்று, அங்குள்ள வீட்டில் உள்ள குழாய்யை திறந்து பாட்டில் நிறைய தண்ணீரை பிடித்துகொண்டு, டெல்லி முதல்வர் அதிஷியின் வீட்டின் வெளியே ஊற்றியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுவாதி மாலிவால், “சகர்பூர், துவாரகா மக்கள் என்னை அழைத்தார்கள். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நான் ஒரு வீட்டிற்குச் சென்றேன், அங்கு கறுப்பு நீர் விநியோகிக்கப்படுகிறது. அந்த கருப்பு தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பி, இங்கு முதல்வர் இல்லத்திற்கு தண்ணீரை கொண்டு வந்தேன். 2015ல் இருந்து, அடுத்த வருடம் எல்லாம் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டு வருகிறோம். நான் கொண்டு வந்த அந்த கறுப்புத் தண்ணீரை, டெல்லி மக்கள் குடிக்க முடியுமா?. 

நான் முதலமைச்சரை எச்சரித்தேன். இது ஒரு சாம்பிள் தான். பதினைந்து நாட்களுக்குள் அவர் முழு டெல்லிக்கும் தண்ணீர் விநியோகத்தை சரி செய்யவில்லை என்றால், நான் ஒரு முழு டேங்கர் தண்ணீரை கொண்டு வருவேன். நான் இந்த தண்ணீரை அவருக்காக விடுகிறேன். இந்த தண்ணீரைக் கொண்டு அவர் குளிக்கலாம், இந்தத் தண்ணீரைக் குடிக்கலாம் அல்லது தன் பாவங்களைப் போக்கலாம்.. சத் பூஜை வருகிறது. இன்று கோவர்தன் பூஜை, நேற்று தீபாவளி, டெல்லியின் நிலை இதுதான். இந்த தண்ணீரை யார் குடித்து வாழ முடியும்? இந்த தண்ணீரைக் குடித்துவிட்டு யார் உயிருடன் இருக்க முடியும்? நீர்வளத்துறை அமைச்சரும் முதல்வர்தான். தினமும் பத்து பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது மட்டும் தான் அவரின் வேலையா?” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்