முனைவர் எஸ்.சாந்தினிபீ எழுதிய 'கல்வெட்டுகளில் தேவதாசி 'எனும் நூலின் நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்,
அந்த காலகட்டத்தில் தமிழகம் தனித்து இருந்ததா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இன்றைக்கு தமிழகம் தனித்து தான் இருக்கிறது. தனித்து தான் இருக்கிறோம், தனித்தன்மையோடு இருக்கிறோம். இங்கு பேசிய ஜெகதீசன் அவர்கள் கூட ஒரு கருத்தைச் சொன்னார். அந்தக் காலத்திற்குள் நான் விரிவாக போனேன் என்றால் சில பிரச்சனைகள் வரக்கூடும்.
தாத்தா பாட்டி எல்லாம் சுதந்திரத்திற்காக போராடினார்கள், பெற்றோர்கள் சமூக நீதிக்காக போராடினார்கள். இந்தத் தலைமுறை சுகவாசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் சுகவாசிகள் ஆகவே வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம் என்றால் நிச்சயமாக அடுத்த தலைமுறை பல போராட்டங்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்படும். அதனால் இந்த சுகவாசி வாழ்க்கையை விட்டுட்டு தெருவில் இறங்கி ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான போராட்டத்தில் நாம் எப்பொழுதும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் கொண்டு போய் நம் பிள்ளைகள் தலையில் சுமத்துவது என்பது மிகத் தவறான ஒன்று.
இங்கே முக்கியமான பல கருத்துக்கள் இந்த புத்தகத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கக் கூடிய ஒரு சூழல் இன்று இந்தியாவில் மட்டுமில்லை உலகெங்கும் இருக்கிறது. ஒரே திசையை நோக்கி இந்த உலகம் நகர்ந்துகொண்டிருக்கிறது, ஒரு கருத்தியலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறக்ககூடிய இந்த காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். ஒரே ஒரு ஒற்றைக் கருத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கக்கூடிய இந்த பாதையை தடுத்து நிறுத்தி எல்லோருடைய கருத்தும், எல்லோருடைய நம்பிக்கைகளுக்கும் இங்கே மரியாதை இருக்கிறது என்ற சூழலை இங்கே மட்டுமில்லை, எல்லா இடங்களிலுமே நாம் உருவாக்க வேண்டும், நிலைநாட்ட வேண்டும். அதுதான் ஒரு பெண்ணுக்கு தேவதாசி முறை ஒழிப்பு என்பதே
ஒரு காலகட்டத்தில் இந்த தேவதாசி முறை என்பது வேறு விதமான வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய பெண்கள் யோசித்துக்கூட பார்க்க முடியாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று இந்த புத்தகத்தில் அம்மையார் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு சொத்து உரிமை என்பது ஒரு மிகப்பெரிய சுதந்திரம். நான் சில புத்தகங்களில் படித்திருக்கிறேன் போருக்கு போகக்கூடிய அரசர்களுக்குக் கூட கடன் கொடுக்கக் கூடிய அளவுக்கு அவர்கள் ஒரு நல்ல நிலையில் இருந்திருக்கிறார்கள். எப்படி அப்படி இருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடன் கொடுத்திருக்கிறார்கள். என்பதையெல்லாம் நாம் படித்திருக்கிறோம். அதேபோல் பெரிய பஞ்சம் தமிழ்நாட்டில் வந்த பொழுது மதுரையில் இருந்த ஒரு தேவதாசி தன்னுடைய வீடு, சொத்து எல்லாவற்றையும் விற்று அங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு கஞ்சி கொடுத்தார்கள், உணவு பரிமாறினார்கள் என்ற அந்த வரலாற்றையும் நாம் படித்திருக்கிறோம். இப்படிப்பட்ட இந்த பெண்களுக்கு எல்லாம் இந்த சமூகத்தில் ஒரு மரியாதை இல்லாத காலகட்டத்தையும் நாம் தாண்டி வந்திருக்கிறோம்.
ஆனால் ஒன்றே ஒன்றை நான் உங்கள் உங்களிடையே ஒரு கேள்வியாக வைக்கிறேன். இந்தப் பெண்கள் பாலியல் தொழிலில் உட்படுத்தப்பட்டார்கள், ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதற்காகத்தான் இந்த சமூகம் அவர்களை மதிக்க மறுக்கிறது. அவர்கள் இழிவாக பார்க்கப்படுவதற்கு காரணம் அவர்கள் அந்த தொழிலில் ஈடுபடக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதுதான். நான் இந்த சமூகத்தை நோக்கி கேட்க விரும்புவது இந்த பெண்கள் அப்படிப்பட்ட தொழிலில் ஈடுபடுவதற்கு யார் காரணம், இந்த பெண்களை இழிவாக நினைக்கக்கூடிய சமூகத்திற்கு அந்த தகுதி இருக்கிறதா? அவர்களை இழிவாக பார்ப்பதற்கு இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு ஆணுக்கு கூட தகுதி இல்லை என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பாலியல் தொழில் என்பது ஒரு பெண் தானாக தேர்ந்தெடுத்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய தொழில் அல்ல, இந்த சமூகம் அவளை சுரண்டுவதற்காக, பெண்மையை சுரண்டுவதற்காக, அவளுடைய உடலை சுரண்டுவதற்காக ஏற்படுத்தி இருக்கக்கூடிய தொழில்.
இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும், உலகத்திலேயே மிக பழமையான தொழில் என்பது இதுதான். அதனால் இதற்கு காரணம் பெண்கள் இல்லை, வெட்கப்பட வேண்டியது பெண்களும், அந்த சமூகமும் இல்லை. வெட்கப்பட வேண்டியது இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவர்கள். மறுபடியும் மறுபடியும் அதில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து மீளமுடியாத சூழலை உருவாக்கியவர்கள் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர அந்த பெண்கள் இல்லை என்பதை சொல்லி விடைபெறுகிறேன். புத்தக ஆசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று உரையை முடித்தார்.