பாதிரியார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்திலும், தான் கூறிய புகாரில் உறுதியாக உள்ளதால், தலைமறைவான 2 பாதிரியார்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கேரளாவின் மல்லப்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண்ணை பாதிரியார்கள் பலாத்காரம் செய்த விவகாரம் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார், பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜான்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ், ஜோப் மேத்யூ ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதிரியார்கள் ஜோப் மேத்யூ(40), ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகிய 2 பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அப்போது இளம்பெண் ஆர்த்தோடக்ஸ் சபைக்கு அளித்த வாக்குமூலத்தையும், மனுவுடன் தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் இவர்களது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையே இளம்பெண் நேற்று முன்தினம் திருவல்லா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அப்போது பாதிரியார்கள் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார்களை உடனடியாக கைது செய்ய போலீசார் தீர்மானித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தால் பின்னர் எந்த காரணம் கொண்டும் வாக்குமூலத்தை மாற்ற முடியாது. தற்போது ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், முதல்கட்டமாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யாத 2 பாதிரியார்களை போலீசார் கைது செய்ய தீர்மானித்துள்ளனர். தலைமறைவாகி உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மற்ற 2 பேரையும் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்காவிட்டாலும், மனு விசாரணைக்கு வரும் வரை காத்திருக்கவும் முடிவு செய்துள்ளனர்.