Skip to main content

“வாக்குகளுக்காக பிரியங்கா காந்தியை பொய் சொல்ல வைக்கின்றனர்” - ம.பி. முதல்வர்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

 MP Chief Minister says They make Priyanka Gandhi lie for votes

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். 

 

இந்நிலையில், 5.06 கோடி  வாக்காளர்களையும், 230 சட்டப்பேரவைகளையும் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி காங்கிரஸ் சார்பில் நேற்று முன் தினம் (12-10-23) மத்தியப் பிரதேசம் மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “முன்பு நேரு குடும்பத்தினர் மக்கள் அனைவரையும் ஏமாற்றி வந்தனர். ஆனால், முன்னாள் முதல்வர் கமல்நாத் இப்போது நேரு குடும்பத்தை ஏமாற்ற தொடங்கிவிட்டார். பிரியங்கா காந்தி பேசிய வீடியோவைப் பார்த்தேன். பொதுக்கூட்டத்தில் வாக்குறுதிகள் குறித்து பிரியங்கா காந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கமல்நாத், அவர் அருகில் சென்று சில திருத்தங்களை கூறினார். அதை கேட்டுக் கொண்ட பிரியங்கா காந்தி திருத்திக் கொண்டு மீண்டும் வாக்குறுதிகளை அளித்துக்கொண்டிருந்தார். 

 

இதன் பிறகு, 1 - 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1500 வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்று கூறினார். அப்போது உடனடியாக கமல்நாத் அவர் அருகில் சென்று மீண்டும் சில திருத்தங்களை எடுத்துக் கூறினார். இதையடுத்து, அந்த உதவித்தொகை வருடத்திற்கு ஒருமுறை அல்ல. மாதந்தோறும் அளிக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்தார். 

 

பிரியங்கா பேசுவதற்கு அளிக்கப்பட்ட குறிப்பு காகிதத்தில் தவறுதலாக இடம்பெற்றிருக்கிறது. அதன் பின்பு, விளக்கம் அளிக்கப்பட்டு திருத்திக்கொண்டு வாக்குறுதிகளை அளித்துள்ளார். தேர்தல் வாக்குறுதி தொடர்பாக கூட காங்கிரஸ் தயாராகவில்லை. காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அழைத்து வந்து வாக்குகளுக்காக பொய் சொல்ல கட்டாயப்படுத்துகின்றனர். ஏனென்றால், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எப்படியும் நிறைவேற்றப் போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிந்து தான் காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்