திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் குறைந்தது 743 ஊழியர்கள் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், மொத்தம் 402 ஊழியர்கள் முழுமையாக குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள சூழலில், மீதமுள்ள 338 ஊழியர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று ஊழியர்கள் இதுவரை கரோனா காரணமாக பலியாகியுள்ளனர்.
ஜூலை மாதத்தில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2.38 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோயில், 80 நாட்களுக்கு பின்னர் கடந்த ஜூன் 8 ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு 6,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த சூழலில், பின்னர் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.