மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் இன்று (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி நேற்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை இன்று காலை 10 மணி அளவில் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி வருகின்றனர். அவர்களைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறி உள்ளது.
இதனிடையே, டெல்லியை நோக்கி வரும் விவசாயிகளின் பேரணியின் போது தடுக்கப்படும் விவசாயிகளை அடைத்து வைப்பதற்காக டெல்லியில் உள்ள பவானா மைதானத்தை தற்காலிக சிறைச் சாலையாக மாற்ற வேண்டும் என டெல்லி அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்து நேற்று (12-02-24) கடிதம் எழுதியிருந்தது. ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.
மத்திய அரசின் கடிதத்துக்கு, டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது. எனவே, விவசாயிகளை சிறையில் அடைப்பது தவறானது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியாது. எனவே, மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.