குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வன்முறையும் நடந்தது. இதனையடுத்து பல மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மட்டும் மம்தா பானர்ஜி இதுவரை 4 முறை மக்களைத் திரட்டி பெரிய அளவில் பேரணிகள் நடத்தியுள்ளார். அந்த வகையில், இன்று காலை கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா சிலையில் இருந்து, காந்திபவன் வரை மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய மம்தா பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
மோடி மற்றும் அமித்ஷா குறித்து பேசிய மம்தா, "என்ஆர்சி விவகாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முரண்பட்ட கருத்துகளை கூறுகின்றனர். என்ஆர்சி குறித்து இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மோடி சொல்கிறார். ஆனால், உள்துறை அமைச்சரான அமித்ஷாவோ, என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கிறார். இருவரின் கருத்துகளும் முரண்பட்டதாக இருக்கிறது. இந்த இரண்டில் எது உண்மை என தெரியவில்லை. பாஜக நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தாலும், மக்கள் அப்படி நடக்க விடமாட்டார்கள்" என தெரிவித்தார்.